|
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகத்தின்
மாநில செயற்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக்கூட்டம்
தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னை மண்ணடி
மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள எஸ்.எம்.ஹெச். பேலசில் ஜுலை 4 அன்று
நடைபெற்றது.
செயற்குழுவில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர்
ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலளார் ரிபாயி உள்பட செயற்குழு
உறுப்பினர்கள் 150 பேர் பங்குக் கொண்டார்கள்.

தமுமுகவின் கொள்கை விளக்கப்பாடலான தமுமுக தலைமையிலே
என்ற ஒலிநாடா கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான சைய்யது நிசார் அஹ்மது
வெளியிட்டார்.
இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. புதிய அரசியல் கட்சி (மக்கள் முன்னேற்றக்
கழகம்)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் புதியதொரு
அரசியல்கட்சியை தொடங்குவதென்றும் இது தொடர்பாக மாநில தழுவிய மாநாட்டை
நடத்தி புதிய கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் அறிவிப்பது என்று
தீர்மாணிக்கப்பட்டது. இதற்கு மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும்
பெயரிடப்படுகிறது.
2. முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவிற்கு
இரங்கல்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் ஏழு முறை
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான குலாம் முஹம்மது
பனாத்வாலா அவர்கள் மறைவிற்கு தமுமுகவின் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறது. முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளக்குமுறல்களை
நாடாளுமன்றத்தில் வலிமையாக எடுத்துரைத்தவர் பனாத்வாலா அவர்கள்.
டெல்லியில் கடந்த 2007 மார்ச் 7 அன்று தமுமுக நடத்திய நாடாளுமன்றம்
நோக்கிய பேரணியில் தனது சொந்த செலவில் பனாத்வாலா அவர்கள் பங்குக்
கொண்டதை இச்செயற்குழு நன்றியுடன் நினைவு கூறுகின்றது. மாபெரும் தலைவரை
இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கட்சியின் சகோதரர்களுக்கும் இச்செயற் குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த பனாத்வாலா அவர்களுக்கு இறைவன் மறுமையின்
நற்பேறுகளை அளப்பறிய அளவில் அளிக்க வேண்டும் என்று இச்செயற்குழு
பிரார்த்தனை செய்கிறது.

3. அமெரிக்காவுடன் அணு உடன்பாடு வேண்டாம்
விடுதலைப் பெற்ற நாள் முதற்கொண்டு நமது நாடு தனது சொந்த காலில் நின்று
பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. பொக்ரானில் அணுகுண்டு
வெடித்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைக் கோள்களை அனுப்பியதும்
நமது நாடு சொந்த முயற்சியில் செய்துள்ள சாதனைகளின் எடுத்துக்காட்டாகும்.
இதே போல் அணு ஆற்றலிலும் நமது நாடு வலிமை பெற இயலும். இந்நிலையில் நமது
நாட்டின் இறையான்மையை அடகுவைத்து அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி
தொடர்பான உடன்பாட்டைச் செய்து கொள்வதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகம் வன்மையாக கண்டிக்கின்றது. 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றிப் பெறவில்லை. இடதுசாரி
கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்த காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக
அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்து கொள்வதை இச்செயற்குழு
வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக இந்த உடன்பாட்டை கைவிட வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறது.

4) கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ்
உள்ளிட்ட ஐக்கிய முற்போக்க கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ்,
திமுக உள்ளிட்ட கட்சிகள் அனைத்திந்திய அளவில் கல்வி மற்றும்
வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கிடு அளிக்கப்படும் என்று
வாக்குறுதி அளித்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச
செயல் திட்டத்திலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு
இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில்
ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையமும் மத்திய அரசிடம் 2007 மே 22 அன்று
அறிக்கையை சமர்பித்து விட்டது, இருப்பினும் மத்திய அரசு இந்த அறிக்கையை
இது வரை நாடாளமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. உடனடியாக மிஸ்ரா
ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப்
பதவிகளில் முதல் கட்டமாக 10 சதவீத தனி இடஒதுக்கீட்டை மத்தியில் ஆளும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளிக்க வேண்டும் என்று இச்செயற்குழு
கோருகின்றது. ஆறு மாதத்திற்குள் அனைத்திந்திய அளவில் இடஒதுக்கீடு
அளிக்காவிட்டால் நாடே ஸ்தம்பிக்கும் போராட்டத்தை தமுமுக நடத்தும்
என்றும் இச்செயற்குழு அறிவிக்கிறது.

5) எட்டாண்டுகளுக்கும் மேலாக தமிழகச் சிறைகளில் இருக்கும் ஆயுள்கால
முஸ்லிம் சிறைவாசிகளை, அண்ணா பிறந்தநாளையொட்டி, மற்ற கைதிகளை விடுதலை
செய்வதுபோல, விடுதலை செய்ய வேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை
கேட்டுக் கொள்கிறது,
6) விசாரணைக் கைதியாக பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும்
குணங்குடி ஆர்.எம்.ஹனிபா அவர்களை உடனடியாக பிணையில் விடுவிக்க தமிழக
அரசு ஆவண செய்யவேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
7) முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டில் நிலவிய ரோஸ்டர்
குழப்பமுறையை தமுமுகவின் கோரிக்கையை ஏற்று நிவர்த்தி செய்த தமிழக
முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு இச்செயற்குழு நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறது.

8) தமுமுகவின் கோரிக்கையை ஏற்று சிறுபாண்மை மக்களுக்கு தனி இடஒதுக்கீடு
வழங்கியதற்காக நடத்தப்பட்ட நன்றி அறிவிப்பு மாநட்டில் கலந்துக் கொண்ட
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமுமுகவின் சமூக சேவைகளை
அங்கீகரிக்கும் பொருட்டு இரண்டு ஆம்புலென்ஸ்களை தனது சொந்த செலவில்
வழங்குவதாக அறிவித்து, அறிவித்தபடியே வழங்கியற்காக இச்செயற்குழு தனது
நன்றியை டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது
9) புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில்
ஆளுக்கட்சி காங்கிரஸ் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. பல
பேராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்படாத
போராட்டங்களை அறிவிக்கப்படாத நாட்களில் ஜனநாயக வடிவில் தமுமுக புதிய
முயற்சிகளை எடுக்கும் என்றும், தேவைப்பட்டால் எதிர்வரும் புதுவை
சட்டமன்ற தேர்தலில் புதிய நிலைபாட்டை எடுக்கவும் தமுமுக தயங்காது
என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
10) வேலூர் கோட்டை பள்ளிவாசலை தொழுகைக்காக திறந்துவிடக்கோரி தமுமுக
பிரம்மாண்டமாக கவன ஈர்ப்பு முற்றுகையை நடத்தியது. மத்திய தொல்பொருல்
ஆய்வுத்துறை உடனடியாக இதற்கு தீர்வு கண்டு, பள்ளிவாசலை தொழுகைக்கு
திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு
கேட்டுக்கொள்கிறது.
11. தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளித்துள்ள 3.5
சதவிகித இடஒதுக்கீட்டை தமிழகத்தில் சில மேல்நிலைப் பள்ளிகளும் உயர்கல்வி
நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த மறுத்து வருகின்றன. தமிழக அரசு இத்தகைய
கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு
கோருகின்றது.
12. மக்களை வஞ்சிக்கும் விலைவாசி
அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக
உயர்ந்துள்ளதால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான பாதிப்பிற்கு
இலக்காகியுள்ளார்கள். இந்த கடுமையான விலையேற்றத்தின் காரணமாக மத்திய
மாநில அரசுகள் மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளார்கள். ஆன்லைன்
வர்த்தகத்திற்கு தடை உட்பட போர்கால வேகத்தில் நடவடிக்கை எடுத்து இந்த
கடுமையான விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது. விலைவாசி உயர்வை
கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் வரும்
நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அதிருப்தியை ஆளும் ஐக்கிய முற்போக்கு
கூட்டணி சந்திக்க நேரிடும் என்று இச்செயற்குழு எச்சரிக்கின்றது.
13, சிறுபான்மை அந்தஸ்து பெற்று நடந்து வரும் சிறுபான்மை தொழில் கல்வி
நிலையங்களில் சிறுபான்மை சமூக மாணவர்களிடம் நன்கொடை என்ற பெயரில் கொள்ளை
அடிக்கும் கல்வி நிறுவனங்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.
சிறுபான்மை சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக அரசு இக்கல்வி
நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கின்றது. இதனை தவறான முறையில்
இக்கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துவதை உடனடியாக இந்நிறுவனங்கள் தடுத்து
நிறுத்த வேண்டும். நிலைமை சீரடையாவிட்டால் தமிழக அரசு இக்கல்வி
நிறுவனங்களில் உள்ள 50 சதவிகித இடங்களை கவுன்சிலிங் மூலம் அந்தந்த
சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென
இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
14) 2007 ஆகஸ்ட் 14 அன்று தென்காசியில் நடந்த ஆறு படுகொலை நடந்த பிறகு
தென்காசியில் அப்பாவிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்பட
வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
15. தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் பெண்கள் நல்வாழ்வு
சங்கத்தை அமைக்க உத்தரவிட்டது. இந்த சங்கத்திற்கு அளிக்கப்படும்
நன்கொடைக்கு இணையாக அரசும் நிதி அளிக்கும் என்று முதலில்
அறிவிக்கப்பட்டது. இத்தகைய சங்கம் முதலில் சென்னையில் நீண்ட காலத்திற்கு
முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக அரசு இச்சங்கத்திற்கு
பொதுமக்களுக்கு எவ்வளவு நன்கொடை அளித்த போதினும் தமிழக அரசின்
பங்களிப்பு ரு5 லட்சத்திற்கு மேல் அளிக்கப்பட மாட்டாது என்று வரம்பு
அமைத்திருப்பது வருந்தத்தக்கது. தமிழக முதல்வல் இம்முடிவை மறுபரீசிலனை
செய்த முன்பு போல் பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைக்கு இணையாக தொகை
அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
16. தமிழ்நாடு அரசு சிறுபான்மை பொருளாதார மேம்பாடு கழகத்தின் சார்பாக
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அளிக்கும் திட்டம் நடைமுறையில்
உள்ளது. ஆனால் பல பள்ளிக்கூட முதல்வர்கள் சிறுபான்மை மாணவர்களின் உதவி
தொகை விண்ணப்பத்தை மேலதிகாரிகளுக்கு அனுப்புவதற்கே மறுத்து வருகிறார்கள்.
தமிழக பள்ளிக்கல்வி துறை இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது.
17) தமுமுகவின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாக பொறுப்பாளர்கள்
கட்டாயம் மக்கள் உரிமையின் நேரடி சந்தாதரர்களாக இருக்க வேண்டும் என்று
இச்செயற்குழு தீர்மரணிக்கிறது.
18) நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் போது
முஸ்லிம்கள் மீது பழிப்போடும் போக்கு தொடருகின்றது. பல அப்பாவி
முஸ்லிம்கள் கைதும் செய்யப்படுகிறார்கள். ஆனாலும் குண்டுவெடிப்புகள்
தொடர்கின்றன. இந்நிலையில் இந்து தற்கொலை படை அமைக்கப்பட வேண்டும் என்று
குண்டு வெடிப்புகள் நடத்த வேண்டும் என்று பயங்கரவாதத்தை துண்டியுள்ள
பால் தாக்கரேவை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுச்
செய்வதுடன் ஜெய்பூர் உள்ளிட்ட வெடிகுண்டு வழக்குகள் குறித்து இவரிடமும்
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது.
19) மதுவினால் நிகழ்ந்துவரும் கொடுமைகளைக் கருத்தில் கொண்டு
தமிழகமெங்கும் பூரண மதுவிலக்கை செயல்படுத்தி மதுவில்லாத தமிழகம் என்ற
பெருமையை உருவாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
20) கடந்த 10.12.2000 அன்று நெல்லை பாளையங்கோட்டையில் கிரஸண்ட் நகர்
பள்ளிவாசலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட புனியங்குடி அப்துர் ரஷீத்
குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவித்த 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை
இதுவரை வழங்கப்படவில்லை பல முறை தமிழக அரசுக்கு இதுகுறித்து
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி கோரிக்கை என்றும், இக்கோரிக்கை
உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், விரைவில் நெல்லை மாவட்டத்தில் தமுமுக
சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இச்செயற்குழு
எச்சரிக்கிறது.
|