|
அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக
எதிர்க்கப்பட வேண்டும்?
பேரா.டாக்டர்எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளுவதற்கு முதுகெலும்பாக
செயல்பட்ட இடதுசாரி கட்சிகளின் உறவை உதறித் தள்விட்டு அமெரிக்கா வுடன்
அணுசக்தி தொடர்பான உடன் பாட்டைச்செய்து கொள்ள மன்மோகன் சிங் அரசு
துணிந்து உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து ஆட்சி
பறிப்போனாலும் பரவாயில்லை, அமெரிக்காவுடன் அணு உடன்பாட்டைச் செய்தே ஆக
வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உடும்பு பிடி பிடித்துள்ளார்.
அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் உடன்பாடு நாட்டு நலனுக்குப் பெரிதும்
உதவக் கூடியது என்று பிரதமரும் காங்கிரசாரும் வாதிட்டு வருகிறார்கள்.
வரும் ஜூலை 22ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத் தில் நடைபெறும்
தருவாயில் அமெரிக்கா வுடனான, 123 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உடன்பாடு
எவ்வாறு நாட்டின் நலனுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
123 உடன்பாடு என்றால் என்ன?
அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் 123வது பிரிவிற்குப் பிற நாடுகளுடன்
ஒத்துழைப்பு என்று தலைப்பிடப்பட்டுள் ளது. அமெரிக்க அரசு பிற நாடுகளுடன்
அணு சக்தி தொடர்பான உடன்பாடு செய்து கொள்வதற்கு முன்பாக இரு
நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்புக் குறித்து ஒரு ஒப்பந்தம் செய்து
கொள்ள வேண்டும் என்று இந்த 123வது பிரிவு விதிக்கின்றது. இத்தகைய
ஒப்பந்தம் தான் 123 ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகின்றது. சுமார் 25
நாடுகளுடன் அமெரிக்கா இந்த 123 உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.
அமெரிக்க அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பிரிவு பிற நாடுகளுக்கு அணு
தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்வதைத் தடைச் செய்துள்ளது. இந்தத் தடையில்
இருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிப்பதற்காக ஹைட் சட்டம் அமெரிக்க
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த ஹைட் சட்டத் தின் அடிப்படையில்
தான் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான அணு ஆற்றல் தேவைகளை நிறைவுச்
செய்வதற்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு வழிவகை செய்வதற்காக
123 உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 123 உடன்பாட்டைச் செய்து
கொள்வதற்கு முன்பாக இந்தியா இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
123 உடன்பாட்டின் அடிப்படையில் இந்தியாவில் அமையும் ஆக்கப்பூர்வமான அணு
உலை நிலையங்களின் பாதுகாப்புத் தரம் குறித்து முதலாவதாக சர்வதேச அணு
ஆற்றல் முகமையுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். இதற்கு
அடுத்ததாக என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் அணுபொருட்கள் ஏற்றுமதி
நாடுகளுடனும் ஆக்கப்பூர்வ அணு உலைகளுக்கு தேவைப்படும் யுரேனியம் போன்ற
எரிப்பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.
சர்வதேச அணு ஆற்றல் முகமை மற்றும் என்.எஸ்.ஜி.யுடன் உடன்பாடு செய்து
கொண்ட பிறகு தான் அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான 123
உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும். அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
அளித்த பிறகு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அணு வர்த்தகம்
தொடங்கும். அணு உலை, அணு ஆற்றல் தொடர்பான தொழில் நுட்பம், அணு
எரிப்பொருட்கள் முதலியவற்றை இந்தியா இறக்குமதிச் செய்து கொள்ளலாம்.
123 உடன்பாட்டை ஏன் எதிர்க்க வேண்டும்?
1,இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அமெரிக்கா கட்டுப்படுத்தும்
நாம் மேலே குறிப்பிட்டவாறு இந்தியாவுடன் அணு ஆற்றல் தொடர்பான 123
உடன்பாட்டை மேற்கொள்வதற்கு வசதியாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹைட்
சட்டம் 2006ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால்
இந்தியாவுடன் அமெரிக்கா அணுஆற்றல் உடன்பாட்டை மேற்கொள்ள இயலாது. ஹைட்
சட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தச் சட்டத்தின் முழுப் பெயர்
ஹென்றி ஜே ஹைட் அமெரிக்க - இந்திய அமைதிக்கான அணு ஆற்றல் ஒத்துழைப்புச்
சட்டம் 2006 ஆகும். இந்த உடன்பாட்டிற்கும் நமக்கும் தொடர்பில்லை, இந்த
உடன் பாடு நம்மைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியின்
தலைவர்கள் பலர் கூறி வருகின்றார்கள். ஆனால் இந்த ஹைட் சட்டம்
இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. .
இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்களான எச். என். சேத்னா,
எம். ஆர். சீனிவாசன், பி.கே. அய்யங்கார், அணு ஆற்றல் கட்டுப் பாட்டு
வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், பாபா அணு ஆய்வு
நடுவத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.கே. பிரசாத், இந்தியா அணு ஆற்றல்
நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குனருமான வை. எஸ். ஆர்.
பிரசாத், இந்திரா காந்தி அணு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்
பிளேசிட் ரொட்ரிக்ஸ் ஆகிய இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட்டாக
வெயிட்டுள்ள அறிக்கையில் ஹைட் சட்டம் இந்தியாவின் நலனுக்கு எதிரானது
என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர்
மன்மோகன் சிங் அமெரிக்காவுடனான அணு உடன்பாடு குறித்து எழுப்பப்பட்ட
அச்சங்களுக்கு பதில் அளிக்கும் போது அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக
ஹைட் சட்டம் அமைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உதாரணமாக இந்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையை நிறைவேற்றினால் உடனடியாக
123 உடன்பாடு முடி விற்குக் கொண்டு வரப்படும். இந்த உடன் பாட்டின்
அடிப்படையில் அமெரிக்காவிடமிருந்து பெற்ற அனைத்துக் கருவிகளையும்
பொருட்களையும் இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும். திடீரென்று நமது
நாட்டில் உள்ள அணு உலைகளுக்கு எரிபொருள் நிறுத்தப்பட்டால், மாற்று
எரிபொருட்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என இந்தியாவும்
அமெரிக்காவும் ஒப்புக்கொண்டிருந்தன. ஆனால் இந்த ஹைட் சட்டத்தில் இதற்கு
வாய்ப்பே இல்லாத வகையில் விதிகள் இயற்றப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில்
இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் அது நமது நாட்டிற்குப் பெரும்
பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். இறக்குமதி செய்யப் பட்ட அணு
உலைகளுக்கு எரிபொருள் இல்லாமல் நாம் பெரும் அவதிப் படுவோம்.

இவ்வாறு பல உதாரணங்களை எடுத்துக் காட்டி ஹைட் சட்டம் நமது நாட்டின்
நலனுக்கு எதிரானது என்பதை மிகத் தெவாக நமது விஞ்ஞானிகள் தோலுரித்துக்
காட்டியுள்ளனர்.
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1947ல் மீண்ட இந்தியாவை
அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு செல்லும் வகையில் ஹைட்
சட்டம் அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. இந்தச் சட்டத்தின் படி
ஹைட் சட்டத்தின் விதி முறைகளை இந்தியா எவ்வாறு கடை பிடித்து வருகின்றது
என்பது குறித்து அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும்
அமெரிக்க அதிபர் அறிக்கை தரவேண்டும்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கையிலும்
குறுக்கிடும் வகையில் ஹைட் சட்டம் அமைந்துள்ளது. ஈரான் தொடர்பாக
அமெரிக்கா எடுக்கும் கொள்கைகளுக்கேற்ப இந்தியாவின் கொள்கை அமைய வேண்டும்
என்று இச்சட்டம் நிர்பந்திக்கின்றது. அமெரிக்காவின் வெளியுறவு
கொள்கைக்கு இசைந்தவாறு இந்தியாவின் கொள்கையும் அமைந்திருக்க வேண்டும்
என்றும் இச்சட்டம் விதிக்கின்றது. இந்த அடிப்படையில் அமெரிக்காவுடன்
உடன்பாடு செய்து கொள்வதற்கு முன்பாகவே அமெரிக்காவின் எடுபிடியாக இந்தியா
மாறிய நிகழ்வும் நடைபெற்று விட்டது. இதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்
நிர்வாகம் வெளிப் படையாகவும் அறிவித்து விட்டது. சர்வதேச அணுஆற்றல்
முகமையில் அமெரிக்காவின் கட்டளையை ஏற்று இந்தியா ஈரானுக்கு எதிராக
வாக்களித்தது. அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு குழுக் கூட்டத்தில்
தொடக்கவுரை ஆற்றிய உறுப்பினர் ரிச்சார்ட் லாகர், 'இந்தியாவுடன் நமது
உறவை மேம்படுத்திக் கொள்வதால் ஏற்படும் பாதுகாப்பு ரீதியான பயன்களை நாம்
அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். கடந்த செப்டம்பரிலும் இந்த ஆண்டு
பிப்ரவரியிலும் சர்வதேச அணுஆற்றல் முகமையில் ஈரானுக்கு எதிராக இந்தியா
வாக்களித்தது. இது தனது பாரம்பரிய வெளியுறவு கொள்கைகளை மாற்றி அமைக்க
இந்தியா தயாராகிவிட்டதை வெளிக்காட்டியுள்ளது. என்று பெருமிதத்துடன்
குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் ஏவலாளாக சர்வதேச அரங்கில் இந்தியா மாறியுள்ளது
மட்டுமில்லாமல், நேரு, சாஸ்திரி, இந்திரா உள்ட்ட காங்கிரஸ் பிரதமர்கள்
பின்பற்றி வந்த அணிசேரா கொள்கையை மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும்
கைகழுவியுள்ளதை இது வெட்டவெச்சமாக்கியுள்ளது.
இவ்வாறாக ஹைட் சட்டம் இந்தியா வின் தனித்தன்மைக்கும், இறையாண் மைக்கும்
வேட்டு வைக்கிறது.
2. 123 உடன்பாடு இந்தியாவின் சுயமரியாதைக்கு
எதிரானது
ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப் படுத்தாது என்று காங்கிரசார் கூறி
வருகின்றார்கள். ஆனால் 123 உடன் பாட்டின் 2.1 பிரிவு மிகத் தெளிவாக ஹைட்
சட்டமும் பிற அமெரிக்க சட்டங்களும் இந்த உடன்பாட்டிற்கும் பொருந்தும்
என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
அணுவியல் ரீதியான தீண்டாமையை சர்வதேச அரங்கில் இந்தியா இதுவரை
அனுபவித்து வந்தது 123 உடன்பாடு மூலமாக இது முடிவிற்குக் கொண்டு
வரப்பட்டுள்ளது என்று இந்த உடன்பாட்டை ஆதரிப்போர் கூறி வருகின்றார்கள்.
ஆனால் 123 உடன்பாட்டின் பிரிவு 5.2 அதிமுக்கியமான அணு தொழில் நுட்பத்தை
இந்தியா பரிமாறிக் கொள்வதைத் தடைச் செய்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட
பயன்பாடுடைய அணு எரிபொருட்களை இந்தியா பயன்படுத்துவது அமெரிக்க
சட்டத்தின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படும். எனவே அணுவியல்
ரீதியான தீண்டா மையில் இருந்து நாம் விடுபட்டு விட்டோம் என்று கூறுவது
வெற்று முழக்கம் தான்.
123 உடன்பாட்டின் 6 (3) பிரிவு அணுக்கழிவுகளை மீள்சுழற்சி செய்து
பயன்படுத்துவது குறித்துக் குறிப்பிடுகின்றது. இந்த மீள்சுழற்சி
செய்வதற்கான வசதிகளைச் செய்து அத்தகைய ஏற்பாடு மற்றும் முறைமை குறித்து
இரு தரப்பு உடன்பாடு செய்து கொண்ட பிறகு முடிவெடுக்கப்படும் என்று
குறிப்பிடுகின்றது. இது குறித்து இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு
ஏற்படாவிட்டால் என்ன நேரிடும் என்பது பற்றி 123 உடன்பாடு மவுனமாக உள்ளது.
வேறு வார்த்தைகல் சொல்ல வேண்டு மெனில் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும்
நமது நாட்டின் உரிமையை அமெரிக்காவே முடிவுச் செய்யும்.
123 உடன்பாட்டின் 14.9 பிரிவின் படி அசாதாரணச் சூழ்நிலைகள் (இவை என்ன
என்பது விவரிக்கப்படவில்லை) காரணமாக மீள்சுழற்சி செய்வதற்காக
ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடு மற்றும் முறைமையை அமெரிக்கா நிராகரிக்க
முடியும் என்று குறிப்பிட்டு ஒரு தலைப்பட்சமாக அமெரிக்காவிற்கு அதிகாரம்
வழங்குகின்றது. ஆனால் இந்த (123) உடன்பாட்டை இந்தியா உடனடியாக
முறித்துக் கொள்ள இயலாது. அமெரிக்காவிற்கு ஒரு ஆண்டு கால அளவுடைய
தாக்கீட்டை (நோட்டிஸை) இந்தியா அளிக்க வேண்டும். உடன்பாட்டை முறித்துக்
கொள்வதற்கான காரணத்தையும் இந்தியா அளிக்க வேண்டும். அமெரிக்காவுடன்
பேச்சு வார்த்தையும் நடத்த வேண்டும். பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால்
உடன்பாட்டை முறித்துக் கொள்ள அனுமதி கோரும் உரிமை மட்டுமே இந்தியாவிற்கு
உண்டு.
14.3 பிரிவின்படி அமெரிக்கா உடன்பாட்டின் விதிமுறைகளை முறித்து விட்டது
என்று மட்டும் கூறி விலகிக் கொள்ள முடியாது. வியன்னா நடை முறை அல்லது
உடன்பாடு சட்டங்கள் அல்லது சர்வதேச அணுஆற்றல் முகமையின் ஆளுநர்கள்
குழுமம் ஆகியவை வகுத்துள்ள நெறிமுறை களுக்கு உட்பட்டு அமெரிக்கா
உடன்பாட்டின் விதிமுறைகளை மீறி விட்டது என்று நிரூபித்து விட்ட பிறகு
தான் இந்த உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ள இயலும்.
15 வது பிரிவின் படி உடன்பாட்டின் விதிகள் குறித்த விளக்கம் அல்லது
செயல்பாடு குறித்துப் பேச்சு வார்த்தை மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும்.
இது குறித்து எழும் சர்ச்சைகள் குறித்து மத்தியஸ்தர் அல்லது நீதிமன்றம்
நாட இந்தியாவிற்கு உரிமை கிடையாது.
16.2 பிரிவு இந்த உடன்பாடு 40 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று
கூறுகின்றது. ஆனால் இந்த உடன் பாட்டின் முன்னோடியாக சர்வதேச அணுஆற்றல்
முறைமையுடன் இந்தியா செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள
பாதுகாப்பு நெறிமுறைகளைக் காலவரம்பின்றி இந்தியா பின்பற்ற வேண்டும்
என்று விதியாக்கப் பட்டுள்ளது.
123 உடன்பாட்டில் சொல்லப்படா விட்டாலும் கூட இந்தியாவின் எதிர்கால
அணுஆற்றல் வளர்ச்சி முயற்சிகளுக்கு இந்த உடன்பாடு ஒரு முக்கிய
கட்டுப்பாட்டை விதிக்கின்றது. மார்ச் 2, 2006ல் ஒத்துக்கொள்ளப்பட்டு,
மார்ச் 7, 2006ல் நமது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரிவு
திட்டத்தின்படி ஆக்கப்பூர்வமான அணுஆற்றல் நிலையம் என்பது இராணுவத்
திட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் இதனை இந்தியாவே அடையாளம் காணும்
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் உருவாக்கப்படும் அனல்
மின் உலைகள் மற்றும் துரித அணு உலைகல் எவை ஆக்கப்பூர்வம னவை என்பதை
முடிவுச் செய்யும் உரிமை இந்தியாவிற்கே உண்டு என்று இந்த உடன்பாட்டில்
கூறப்பட்டது. ஆனால் அமெரிக்க வெளியுறவு குழு கூட்டத்தில் பேசிய புஷ்
நிர்வாகத்தின் சார்பாக 123 உடன்பாடு உருவாக்கத்தில் முக்கிய பங்கு
வகித்த நிக் பர்ன்ஸ், இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாகும் அனைத்து
துரித அணு உலைகள் அனைத்துப் பாதுகாப்பு விதிமுறை களுக்கு கீழ் வரும்
என்றும் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்குள் இந்தியா வில் உள்ள 90 முதல்
95 சதவிகித அணு உலைகள் அனைத்தும் முழுமையான பாதுகாப்புக்
கட்டுப்பாட்டின் கீழ் (அதாவது அமெரிக்காவின் கண்காணிப் பின் கீழ்) வந்து
விடும் என்று குறிப்பிட்டுள்ளார். பர்ன்ஸ்சின் இந்த அறிவிப்பிற்கு
இந்தியா இதுவரை பதில் அக்கவில்லை.
எனவே 123 உடன்பாடு நமது நாட்டின் சுயமரியாதையை அமெரிக்காவிடம் அடகு
வைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
3, சர்வதேச அணுஆற்றல் முகமையிடம் சரணாகதி
அமெரிக்காவுடன் 123 உடன்பாட்டைச் செய்வதற்கு முன்பாக சர்வதேச அணுஆற்றல்
முகமையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும். இந்த
ஒப்பந்தத்தின் நகலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிலைப்பதற்கு
முதுகெலும்பாக விளங்கிய இடதுசாரி கட்சிகள் கேட்டப்போ தெல்லாம் அதனை
தருவதற்கு மன்மோகன் சிங் அரசு மறுத்துவிட்டது. ஆனால் அமெரிக்க இணைய
தளங்கல் இந்த உடன்பாட்டின் நகல் பிரசுரிக்கப்பட்டு அது சாமானிய
இந்தியர்களுக்கு இணையம் வழியாக கிடைத்த பிறகு இந்திய அரசு அதனை
வெயிட்டது. இது ஒரு பெரும் வெட்கக்கேடு,
அணுஆற்றல் முகமையுடன் செய்துக் கொள்ளப்பட்ட உடன் பாடும் இந்தியாவின்
தனித்தன்மையை, சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது.
அணுஆற்றல் முகைமையுடன் செய்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாட்டின்
முகப்புரையில் இந்தியாவின் அணுஉலைகளுக்கு வாக்களிக்கப்பட்ட எரிபொருட்களை
அளிப்பதற்கு அணுபொருள் ஏற்றுமதி நாடுகள் மறுத்து விட்டால் இந்தியா
தகுந்த முறையில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று
குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தின் விதிமுறைகல் இது குறித்து
எதுவும் குறிப்பிட்டப்படவில்லை. முகப்புரையில் குறிப்பிடபட்டுள்ளது
சட்டமாகாது. சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகல் இருந்து
இந்தியாவின் அணுஉலைகளுக்கு எப்போது விதிவிலக்கு அளிக்கப்படும் என்பதை
இந்த ஒப்பந்தத்தின் 32வது பத்தியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. 1.
இந்தியாவும் சர்வதேச அணுஆற்றல் முகமையும் கூட்டாக ஒப்புக்கொண்டால் 2.
இந்த உலைகள் அணுஆற்றல் தொடர்பான பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என்ற நிலை
ஏற்பட்டால் மட்டுமே குறிப்பிட்ட அணு உலைகள் சர்வதேச முகமையின்
பாதுகாப்பு கட்டுப்பாட்டின் வளையத்தில் இருந்து விலகும். இந்த விதிமுறை
என்ன உணர்த்துகின்றது? நமது அணு உலைகள் அணு ஆற்றலை தயாரிக்கும் ஆற்றல்
அனைத்தையும் இழந்த பிறகு அதுவும் சர்வதேச அணுஆற்றல் முகமை அந்த நிலைக்கு
சான்று வழங்கிய பிறகு தான் அது பாதுகாப்பு விதிமுறைகலிருந்து விலகும்.
சர்வதேச முகமையுடன் செய்துக் கொள்ளப்படும் உடன்பாட்டில் எழும்
சர்ச்சைகள் குறித்து அதன் ஆளுநர் குழுமம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது
என்று இந்த உடன்பாட்டில் கூறப் பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் நிலை
சரியானதாக இருந்தாலும், அதற்கு மாற்றமாக ஆளுநர் குழுமம் தீர்ப்பு
வழங்கிவிட்டால், இந்தியாவிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில்
பிரச்சனை கொண்டுச் செல்லப்பட்டு இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகள்
விதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். ஈரான் விவகாரத்தில் இவ்வாறு ஏற்பட்டதை
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அணுகழிவுப் பொருட்களை மீள்சுழற்சி
செய்ய ஈரானுக்கு உரிமை உண்டு என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிலைப்பாடு
எடுத்த போதினும், அமெரிக்காவின் தூண்டுதல் பேரில் இப்பிரச்சனையை
சர்வதேச அணுஆற்றல் முகமை பாதுகாப்பு குழுமத்திற்கு எடுத்துச் சென்றது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அணுஆயுதம் இல்லாத நாடு என்ற தகுதியை
அளிக்கின்றது. இது பிரதமர் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிக்கு
முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நாம் உருவாக்கியுள்ள அணுஉலைகளை
சர்வதேச அணு ஆற்றல் முகமையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அதே
நேரத்தில் அணுஆயுத ஆய்விற்காக இந்த உலைகல் நாம் எதுவும் செய்ய இயலாது.
ஆனால் இந்தியாவிற்கு அணுஆயுத நாடு தகுதி அளிக்கப் பட்டிருந்தால் அவ்வாறு
செய்ய முடியும்.
சர்வதேச அணுஆற்றல் முகமையுடன் செய்து கொள்ளும் உடன்பாடு ஹைட் சட்டம்
மற்றும் 123 உடன் பாட்டின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில்
அமையவில்லை. நாம் இறக்குமதி செய்யும் அணு உலைகளை காலங்காலமாக சர்வதேச
கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகின்றது இந்த உடன்பாடு. அமெரிக்காவின்
வெளியுறவு கொள்கைகளுக்கு முரணாக இந்தியா செயல்பட்டால் உடனடியாக இந்த
அணுஉலைகளை நிரந்தரமாக மூடி விடும் ஆபத்தும் உள்ளது. எனவே இந்த
ஒப்பந்தத்தை செய்வது மூலம் மன் மோகன் சிங் அரசு நாம் பெற்ற சுதந்
திரத்தை அடகு வைத்து அந்நியருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கும்
செயலில் ஈடுபடடுள்ளது.
4.இந்தியாவின் எரிசக்தி தேவையை 123 உடன்பாடு நிறைவேற்றுமா?
இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவையை நிறைவேற்றுவதற்கு
அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாடு அவசியம் தேவை என்று உடன்பாட்டின்
ஆதரவாளர்கள் கூறி வருகின்றார்கள். ஆனால் அமெரிக்கா வுடன் அணுஆற்றல்
உடன்பாடு மேற்கொண்ட பிறகு அதன் காரணமாக இந்தியாவில் அணுமின் நிலையங்கள்
இயங்கத் தொடங்கினாலும் இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவைகளில் 9
சதவிகிதத்தைக் கூட அது பூர்த்தி செய்யாது. இது எந்த வகையிலும் நமது
எரிசக்தி தேவை பரிபூரணமாகிவிடும் என்ற பாதுகாப்பு உணர்வை நமக்கு
அளிக்காது.
இந்திய அரசின் அணுஆற்றல் துறை நமது உள்நாட்டு எரிபொருட்களைப்
பயன்படுத்தி 2040ல் 1 லட்சம் மெகவாட் மின்சக்தியையும், 2050ல் 2
லட்சத்திற்கும் அதிகமான மெகவாட் மின்சக்தியையும் நம்மால் தயாரிக்க
முடியும் என்று கணித்துள்ளது. இவை முழுக்க முழுக்க நமது சொந்த அணுஆற்றல்
உற்பத்தி திட்டத்தைப்பயன்படுத்திக் கிடைக்கும் மின் சக்தியாகும். உண்மை
இவ்வாறு இருக்கும் போது பெரும் பொருட் செலவில் தமது நாட்டின் தன்மானத்தை
அடகு வைத்து அமெரிக்காவுடன் அணுஆற்றல் உடன்பாடு தேவையா என்பதை நாட்டு
மக்கள் சிந்திக்க வேண்டும்.
இது மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகல்
தயாராகும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு அனல்
மின்நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை விட இரு மடங்கு
அதிகமாக இருக்கும். நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலை
யத்தை அமைப்பதற்கு ஆகும் செலவை விட இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளைக்
கொண்டு இயங்கும் நிலையத்தை உருவாக்க செலவு மும்மடங்கு அதிகமாக இருக்கும்.
நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களும்,
எரிவாயுவை அடிப் படையாகக் கொண்டு இயங்கும் மின்உற்பத்தி நிலையங்களும்
எதிர்கால இந்தியாவின் மின் தேவையை நிறை வேற்றப் போதுமானவை. இவற்றுடன்
சொந்தக் காலில் நின்று மூன்று கட்டங்களாக உருவாக்கத் திட்டமிட்டுள்ள
அணுஆற்றல் நிலையங்களும், குறைந்த செலவில், அந்நிய நாட்டிற்கு தன்
மானத்தை அடகு வைக்காமல் நமது தேவையைப் பூர்த்தி செய்யும். ஆனால்
அமெரிக்க எஜமானர்கன் உத்தரவை மன்மோகன் சிங் எப்படி மீறுவார்? இதன்
காரணமாகத் தான் பாகிஸ்தான் வழியாக ஈரானில் இருந்து இயற்கை வாயுவை குழாய்
மூலமாகக் கொண்டு வரும் திட்டத்தை அவர் கிடப்பில் போட்டுள்ளார். இந்தத்
திட்டம் நிறைவேற்றப் பட்டால் மத்திய ஆசியா, மேற்காசியா மற்றும்
தெற்காசியாவில் ஒரு எரிசக்தி பாதுகாப்பு வளையம் உருவாகி விடும்.
அமெரிக்காவிற்கு இது எரிச்சலாக இருப்பதால் ஈரான்/பாகிஸ்தான்/இந்தியா
குழாய் எரிவாயு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் தான் அந்நாட்டு அரசின் அனைத்துக்
கொள்கைகளையும் வகுக்கின்றன. தற்போது இந்தியாவுடனான அணுஉடன் பாடு
வர்த்தக நிறுவனங்கன் நலன் களை மேம்படுத்துவதற்காகவே வகுக்கப் பட்டுள்ளது.
இதற்காக ஆட்சியாளர் களை இந்த நிறுவனங்கள் தங்கள் வளைக்குள் கொண்டு
வருகின்றன. மன்மோகன் சிங் அவர்கள் தனது அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை,
அமெரிக்காவுடன் உடன்பாட்டைச் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக
இருப்பதற்கான சூட்சுமம் இது தான். செறியூட்டப்பட்ட யுரேனியத்தையும், அணு
ஆயுதங்களை செயலிழக்கச் செய்த பிறகு கிடைக்கும் புளுட்டோனியத்தையும்
இந்தியாவின் தலையில் கட்டுவதற்கும், இந்தியாவில் நிறுவப்படும் அணுமின்
நிலையங்கல் இருந்து கொளுத்த லாபத்தைப் பெறுவதற்கும் அமெரிக்க வர்த்தக
நிறுவனங்கள் வாயைப்பிளந்து கொண்டு ஆவலுடன் காத்திருக்கின்றன. லாபத்தைப்
பெறுவது மட்டுமின்றி இந்தியாவின் கொள்கைகளையும் நிர்ணயிக்கும் உரிமையைப்
பெறுவதினால் தான் உடனடியாக இந்த உடன்பாட்டை நிறைவேற்ற அமெரிக்கா
அவசரப்படுகின்றது. தனது எஜமானின் அவசரத்தை விட அதிக அவசரத்தை மன்மோகன்
சிங் காட்டுவதைப்புரிந்து கொள்ள முடிகின்றது.
அணுஆற்றலை அடிப்படையாகக் கொண்ட மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது
சிக்கனமானது அல்ல. அணுஆற்றல் நிலையங்களை அமைப்பதும், நிர்வகிப்பதும்.
பிறகு அவற்றைச் செயல் இழக்க வைப்பதும் பெரும் பொருட்செலவைத் தரக்கூடியவை
என்பதையெல்லாம் தற்போதைய ஆட்சியாளர் எண்ணிப்பார்ப்பதில்லை.
ஆணுஆற்றல் மாசற்றது, விலை குறைவானது என்று சொல்லப்படுவது உண்மை அல்ல.
உயிருக்கு உலைவைக்கும் பல மாசுக்களை அணுஉலைகள் வெளியேற்றுகின்றன.
அணுஆற்றலுக்கு மாற்றாக மின் உற்பத்தி செய்வதற்கு இந்தியாவில் வளமான
வழிகள் உள்ளன. சூரிய சக்தி, காற்றலைகள், ஆறுகள் போன்றவற்றை முழுமையாகப்
பயன் படுத்தினால் நமது தேவைகளை நிறை வேற்ற முடியும். அத்தகைய திட்டங்
களை நிறைவேற்றுவதற்கு இந்திய நலனை மட்டுமே நெஞ்சில் ஏந்தி நிற்கும்
ஆட்சியாளர்கள் வரவேண்டும்.

ஜூன் 25 அன்று மரணமடைவதற்கு அரை மணி நேரத்திற்கு
முன்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம்
மஹ்முத் பனாத்வாலா சாஹிப் அவர்கள் அமெரிக்காவுடனான அணுஆற்றல்
ஒப்பந்தத்தை எதிர்த்துப் பத்திரிகை அறிக்கை வெüயிட்டார்.
ஆயிரக்கணக்கான பத்திரிகை அறிக்கையை வெளியிட்டுள்ள பனாத்வாலா சாஹிப்பின்
கடைசி பத்திரிகை அறிக்கையில் 'அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ள
உள்ள அணுஆற்றல் தொடர்பான ஒப்பந்தம் எங்கள் கட்சிக்கு (முஸ்லிம் லீக்)
உடன்பாடுடையது அல்ல. புஷ் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய தேற்றங்களுக்கு
நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை
மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் மறைந்த தங்கள் தலைவரின் கடைசி விருப்பத்திற்கு மாற்றமாக இந்தியன்
யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மன் மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க முடிவுச் செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக முஸ்லிம் லீக் இருந்து
வருகின்றது. முஸ்லிம் லீக் கட்சியின் ஒரே உறுப்பினராக மக்களவையில்
இருக்கும் இ. அஹ்மது மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக உள்ளார்.
பனாத்வாலாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் இவர் பதவி விலக
வேண்டும். மக்கள் நலனை விடச் சுயநலனே மேலானது என்ற கொள்கையின் காரணமாக
பனாத்வாலாவின் கடைசி விருப்பத்தைவிட இந்தியாவை அடிமைப்படுத்தும்
அமெரிக்கா உடன் செய்யும் உடன்பாடே மேலானது என்று முடிவுச் செய்து
முஸ்லிம் லீக் மன்மோகன் சிங் கட்சிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில்
வாக்களிக்க முடிவுச் செய்துள்ளது.
(பேராசிரியர் காதர் மைதீன் மக்களவையில் திமுக உறுப்பினராக இருக்கிறார்.
தற்போது பனாத்வாலாவின் மரணத்திற்குப் பிறகு இவர் முஸ்லிம் லீக்
கட்சியின் தற்காலிகத் தலைவராக இருக்கிறார். இவராலும் பனாத்வாலாவின்
விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. திமுகவின் கொறடா போடும் உத்தரவிற்குக்
கட்டுப்பட்டே இவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க இயலும்)
|